ஈழப்போராட்டக் காரணிகள்.
ஈழப்போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது, அது எப்படி வளர்ந்தது, இற்றை வரை அது எதிர்கொண்ட சவால்கள் எவை என்பன பற்றி விரிவாக எழுதப்பட வேண்டுமென்பது உண்மை. இந்தத் தேவையை மயூரன் அண்மையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கெனவே பெயரிலி இது பற்றி எழுத முயற்சிப்பதாகச் சொல்லியுள்ளார். அந்த வகையில் எனது மிகச்சின்ன முயற்சியிது.முதலில் சிங்கள - தமிழ் இனமுறுகல் என்பது இன்று நேற்றுத் தொடங்கப்பட்டதன்று என்பது என் எண்ணம். இதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்களென்றே நம்புகிறேன். ஏறக்குறைய ஈராயிரம் -குறைந்தபட்சம் 1500 வருடங்களாகப் புகைந்து வருவது தான் இந்த இன முரண்பாடு. ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயே இலங்கையைத் தனிச்சிங்கள - பொளத்த நாடாக மட்டுமே அடையாளங்காட்டியும் மற்றவர்களை வந்தேறு குடிகளாகவும் துரத்தப்பட வேண்டியவர்களாகவும் கதை கட்டமைக்கப்பட்டு காலங்காலமாக ஊட்டி வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இடையில் இவ்வுணர்வு தொய்யும் போதெல்லாம் யாராவது வந்து எண்ணெய் ஊற்றி எரித்து விடுவார்கள். இன்றும் கூட தங்கள் வரலாற்று நூலாகச் சிங்களவர் அடையாளங்காட்டும் 'மகா வம்சம்' என்ற நூல் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.முதலில் மகாவம்சத்தை ஒரு வரலாற்று நூலாக அடையாளங்காட்டுதலே சுத்த காட்டுமிராண்டித்தனமும் அயோக்கியத்தனமுமாகும். அப்படிப் பார்க்கப்போனால் இராமாயணம் மகாபாரதங்களைக்கூட யாரும் தமக்கேற்றபடி வரலாற்று நூற்களாகக் கட்டமைத்து எதையும் கதைக்க முடியும். காம வேட்கையுற்ற சிங்கமொன்றினால் உருவாக்கப்பட்டு ஒரே தாய்வயிற்றில் பிறந்த ஆண்-பெண் கூடி உருவாக்கப்பட்ட இனம் தான் இந்தச் சிங்கள இனமென்றும், புத்தரால் அவர்களுக்கெனச் சிறப்பாக உருவாக்கப்பட்ட தீவுதான் இந்த இலங்கை என்றும், அவர்களை அங்கே குடியேற்றுவதற்காக 'வாக்களிக்கப்பட்ட' தீவிலிருந்தவர்களை புத்தர் வெருட்டிக் கலைத்தார் என்றும் கதை சொல்கிறது மகாவம்சம். நிறைய மாயாஜாலச் சம்பவங்களைக் கொண்ட இந்நூல்தான் அவர்களின் வரலாற்று நூலாம். (இதன் தமிழ் மொழிபெயர்ப்பின் சில பகுதிகளை வன்னியில் வாசித்தேன். முழு மொழிபெயர்ப்புப் புத்தகத்தையும் வெளியிட்டுவிட்டார்களா தெரியவில்லை. கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்)இதன்பின் அவ்வப்போது தமிழர்களுக்கும் சிங்களவருக்குமிடையில் போர்கள் நடந்தன. போர்த்துக்கேய வருகைவரை தனித்தனி இராச்சியங்கள் இருந்துள்ளன. வெள்ளையரிடம் இறுதியாக இழக்கப்பட்ட இன்றைய மத்திய இலங்கையான கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் ஒரு தமிழன் என்ற தகவல் வியப்பானது.ஆகவே இந்த இனப்பிரச்சினையின் வேர் ஆயிரமாண்டுகளாக ஊட்டியூட்டி வளர்க்கப்பட்ட இனவெறியில் தங்கியுள்ளது.
0 comments:
Post a Comment