போர்க்குயிலின் மறைவு
தமிழீழப் போராட்டத்தில் எழுச்சிப் பாடல்களின் பங்கும் தாக்கமும் மிகப்பெரியது. “புலிகள் பாடல்கள்” என்ற முதலாவது வெளியீட்டிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் இயற்றி இசையமைக்கப்பட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. எண்பதுகளில் பெரும்பாலும் தமிழகக் கலைஞர்களைக் கொண்டு உருவான பாடல்களே அதிகம். டி.எம்.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், மனோ, பி.சுசீலா, சொர்ணலதா, வாணி ஜெயராம் என்று திரையிசையிற் பிரபலமான பல பின்னணிப் பாடகர்களின் குரல்களில் அப்போதைய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன.இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின் தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்திலேயே பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுடன் முழுக்க முழுக்க உள்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டே அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்நேரத்தில் சிறந்தவொரு பாடகன் எங்களுக்குக் கிடைத்தான். மேஜர் செங்கதிர் என்ற போராளிக் கவிஞனின் வரிகள் பாடலாக உருப்பெற்றபோது இப்போராளிப் பாடகன் அறிமுகமானான். “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற பாடலே இப்போர்ப்பாடகனின் முதலாவது அரங்கேற்றம். அதன்பின் களத்தில் சாகும்வரை சுமார் 75 பாடல்கள் வரை பாடியுள்ளான் சிட்டு எனும் இப்போராளிப் பாடகன்.விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பொறுப்புக்களிலும் அரசியல்துறையின் பொறுப்புக்களிலும் தனது போராட்டப் பணியைச் செய்து வந்தான். கேணல் கிட்டு அவர்களுக்காக 'சிட்டு' பாடிய “கடலம்மா” பாடல் மிகுந்த பிரபலம். சிட்டுவின் குரல் யாரையும் கட்டிப்போட வல்லது. பின் ‘உயிர்ப்பூ’ திரைப்படத்தில் சிட்டு பாடிய‘சின்னச் சின்னக் கண்ணில் - வந்து மின்னல் விளையாடிடும்’என்ற பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியாது. வெளியிடப்படும் எந்த ஒலிநாடாக்களை எடுத்தாலும் அதில் சிட்டுவின் பாடல் இருக்கும்.ஜெயசிக்குறு தொடங்கியபின் வன்னியில் கடும் சண்டை மூண்டது. வெற்றி தோல்வி எதுவும் தெரியாமல், எப்போது முடியுமென யாராலும் சொல்ல முடியாமல் நீண்டது சண்டை. அச்சமர் தொடங்கியதிலிருந்து சமர்க்களத்திற் பணியாற்றினான் சிட்டு. இறுதியில் ஆவணி முதலாம் திகதி ஓமந்தை இராணுவத்தளத்தின் மீது புலிகளின் திட்டமிட்ட அதிரடித் தாக்குதலின்போது களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான் எங்கள் பாடகன் மேஜர் சிட்டு.
சிட்டு சிட்டு
0 comments:
Post a Comment