தமிழீழத் தேசியக்கொடி
ஒரு நாட்டின் தேசிய இனங்கள் நாட்டு மக்கிளின் பண்புகள்,ஆட்சி,இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக் கொடி விளங்குகின்றது.ஒவ்வொரு நாட்டின் இயல்புகள் நிலைமைகள்,எண்ணங்களின் வெளிப்பாடாக அந்தந்த நாட்டுக் தேசிய கொடிகளின் சின்னம் நிறம் அளவு என்பன வேறுபட்டிருக்கும்.தேசியக் கொடியின் அளவு பெரும்பாலும் 3:2 என்ற அளவினதாகவே இருக்கின்றது.சில நாடுகளின் தேசியக் கொடிகள் 2:1, 1:1 என்ற அளவினைக் கொண்டதாகவும் இருக்கின்றது
நாம் போற்றி வணங்குதற்கூடாக தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது.தேசியக்கொடியை வணங்குவது நாட்டை வணங்குவது போலாகும்.
நாட்டை போற்றி வணங்குவதற்கூடாகத் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது.தேசியக்கொடியை வணங்குவது நாட்டை வணங்குவது போலாகும்.
நாட்டின் தலைவர்களைவிட, படை, ஆட்சி என்பவற்றைவிட உயர்ந்ததாகத் தேசியக் கொடி மதிக்கப்படுகின்றது.எனவேதான் எந்த ஒரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின் போதும் நாட்டின் தலைவர்,படை,அரசலுவலர்,குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.
தேசியக் கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு,சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைகின்றன.அது போன்றே தேசியக் கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டைச் சென்றடையும்,எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்படும் அக்குற்றத்துக்குக் கடும் ஒறுப்பு (தண்டணை) வழங்கப்படுகின்றது.
எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் 1977 ஆம் ஆண்டு,விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கென உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த புலிக்கொடியில் இருந்த எழுத்துக்கள் நீக்கபட்டு தமிழீழத்தின் தேசியக்கொடியாக 1990 ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்களால் அறிவிக்கட்பட்டது. 1990 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் மாவீரர் எழுச்சிவாரத் தொடக்க நாளன்று முதல் தடவையாகத் தமிழீழத் தேசியக் கொடி எமது தேசியத் தலைவர் அவர்களால் ஏற்றிவைக்கபட்டது.
அன்றிலிருந்து தமிழீழத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டே தொடங்கப்படுகின்றன.தேசியக்கொடி ஏற்றப்படும்போது தமிழீழத் தேசியக்கொடி வணக்கப்பண் பாடப்படுகின்றது.
தலைவர்கள்,சிறப்புக்குடிமக்கள் போன்றோரின் மறைவையொட்டி ஏற்படும் நாட்டின் துயர நிகழ்வுகளின்போது தேசியக்கொடி கொடிக்கம்பத்தின் உச்சிவரை ஏற்றப்பட்டு கொடிக்கம்பத்தின் நடுப்பகுதிவரை இறக்கிக் கட்டிப் பறக்கவிடப்படுவது வழக்கம்.இதன்மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது.
எமது நாட்டை அமைப்பதற்கான விடுதலைப் போராட்டத்தை வீறு கொள்ளவைத்த, மக்களை விடுதலை இயக்கத்தின்பால் ஈர்த்து அணி திரளவைத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்குறியான(இலட்சினையான) பாயும் புலியே எமது தேசியக்கொடியின் நடுவில் அமைந்திருக்கிறது.
எமது தேசியக்கொடியை மஞ்சள்,சிவப்பு,கறுப்பு,வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன.
தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு. அந்த தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதால் அவர்களுக்குத் தன்னாட்சி(சுயநிர்ணய)உரிமை உண்டு.இந்த தன்னாட்சி உரிமை அவர்களது அடிப்படை அரசியல் உரிமை.தமது தாயகத்தை மீட்டெடுத்து,தன்னாட்சி உரிமையை நாட்டுவதற்கு தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது.மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கின்றது.
ஏற்றத் தாழ்வுகளற்ற, வர்க்க, சாதிய, முரண்பாடுகளற்ற பெண்ணடிமைத்தனமற்ற புரட்சிப்பாங்கான அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.
கரடுமுரடான, சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்த வழிக்கூடாகச் சென்று எமது இலக்கை அடைவதற்கு வேண்டிய உருக்குப்போன்ற உள்ள உறுதியைக் கறுப்பு நிறம் குறித்துக்காட்டுகின்றது.
அமைப்பினதும் போராட்டத்தினதும் தூய்மையை, நேர்மையை வெள்ளை நிறம் வெளிப்படுத்தி நிற்கின்றது.
எமது தேசியக் கொடியை நாம் எமது உயிரிலும் மேலாகப் போற்றிப் பேணிப்பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும்.
கொடிவணக்க ஒழுங்குமுறை
- தேசியக்கொடி ஏற்றப்படும் கொடிக்கம்பத்தின் உயரம் 22அடிக்குக் குறைவாக இருக்கக்கூடாது.
- தேசியக்கொடியின் நீளம் 4 அடியாகவும் உயரம் 3 அடியாகவும் இருத்தல் வேண்டும்
- தேசியக்கொடியுடன் வேறு கொடிகளும் ஏற்றப்படின் அக்கொடிகள் தேசியக்கொடியைவிடப் பெரிதாக இருக்கக்கூடாது.
- தேசியக்கொடியேற்றப்பட்ட கொடிக்கம்பத்தைவிட ஏனைய கொடிக்கம்பங்கள் 2 அடி உயரம் குறைந்ததாக இருக்க வேண்டும்.
- தேசியக்கொடியுடன் பிறநாடுகளின் தேசியக்கொடிகள் ஏற்றப்படுவதாயின் ஒரே அளவு உயரமுள்ள கொடிக்கம்பத்தில் ஒரே அளவான கொடிகளை ஏற்றலாம்.ஆனால் எமது தேசியக்கொடிக்கு இடப்புறமாகவே ஏனையநாடுகளின் கொடிகள் பறக்கவிடப்படவேண்டும்.
- எமது தேசியகொடியுடன் பிறநாட்டுத் தேசியக்கொடிகளை ஏற்றுவதாயின் எமது தேசியக்கொடி ஏற்றப்பட்டதன் பின்பே ஏனைய தேசியக்கொடிகள் ஏற்றப்படவேண்டும்.
- கொடிகள் இறக்கப்படும்போது ஏனைய கொடிகள் இறக்கப்படவேண்டும்.பின்பு இறுதியாகவே எமது தேசியக்கொடி இறக்கப்பட வேண்டும்.ஏனைய கொடிகள் பறந்துகொண்டிருக்போது எமது தேசியக்கொடியை ஒருபோதும் இறக்கக்கூடாது.
- ஊர்வலங்களில் தேசியக்கொடியை எடுத்துச் செல்வதாயின் கொடியின் உயரத்தின் 4 பங்கு உயரமான கம்பத்தில் கட்டி நெஞ்சுக்கு நேராகவோ அன்றி வலத்தோளிலோ ஏந்திச் செல்ல வேண்டும்.தேசியக்கொடியை ஏந்திச்செல்பவருக்கு முன்பாக வேறு எந்தக் கொடியை ஏந்துபவரும் முந்திச் செல்லக்கூடாது.
- கூட்ட மேடைகளில் பேச்சாளரின் தலைக்கு மேலாக பின் புறத்தட்டியில் தேசியக்கொடியைக் கட்டலாம்.
- தேசியக்கொடியில் எதுவும் எழுதப்பட்டிருக்கக் கூடாது.
- தேசியக்கொடி கிழிந்தோ, சிதைந்தோ போனால் அதைப் பழந்துணியாகப் பயன்படுத்தவோ குப்பைத்தொட்டியில் வீசவோகூடாது.
- தேசியக்கொடியை வணிக விளம்பரத்துக்கோ,விரிப்பாகவோ அன்றி வேறெந்தத் தேவைகளுக்காகவோ பயன்படு;த்தக்கூடாது.
- குறிப்பிட்ட சில உயர் அரச பணியகக் கட்டிடங்களில் மட்டும் தேசியக்கொடி கொடிக்கம்பத்தில் ஏற்றப்படலாம்.
- கட்டிடங்களில் கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும் தேசியக்கொடி நாள்தோறும் கதிரவன் எழுந்ததற்குப் பின்னர் ஏற்றப்பட்டு மறைவதற்கு முன்பாக இறக்கப்படவேண்டும்.
- ஆட்சிப்பொறுப்பிலுள்ளோர்,தலைவர்கள்,உயர் அலுவலர்கள் வீடுகளிலும் எந்நாளும் பகலில் தேசியக்கொடி பறக்க விடப்படலாம்.
- வெளிநாடுகளிலுள்ள எமது கிளைகளிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் எமது தேசியக்கொடி பறக்க விடப்படலாம்.
- குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் பொதுமக்கள் வீடுகளில் கட்டிடங்களில்,தேசியக்கொடி பறக்கவிடப்படலாம்.இவை முறையாகக் கம்பங்களில் மட்டுமே ஏற்றப்படவேண்டும்.
- தெருவுக்குக் குறுக்காகவோ பக்கமாகவோ கயிறுகளில் தேசியக்கொடி தொங்கவிடப்படக்கூடாது.
- தேசியக்கொடியைத் தலைகீழாக பறக்கவிடக்கூடாது.
- தேசியக்கொடியிலுள்ள புலி,கொடிக்கம்பத்தைப் பார்த்தவாறு பறக்கவிடக்கூடாது.புலியின் பார்வை கொடிக்கம்பத்துக்கு எதிர்ப்புறமாகக் கொடி பறக்கும் பக்கமாக இருக்கும் வகையில் கொடி பறக்கவிடப்படவேண்டும்.
- தேசியக்கொடியைக் கீழிருந்து பறந்தபடியிருக்கும் நிலையிலேயே ஏற்றவேண்டும்.மடித்தபடி மேலே ஏற்றி அங்கிருந்து விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடி ஏற்றக்கூடாது.
- தேசியக்கொடியை ஏற்றுபவர் கொடி வணக்கம் செலுத்த அணிவகுத்து நிற்கும் மக்களுக்கும்,கொடிக்கம்பத்திற்கும் இடையில் நின்று கொடியை ஏற்றுதல் கூடாது.
- தேசியக்கொடியை ஏற்றும்போது அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்த வேண்டும்.
- தேசியக்கொடி ஏற்றப்படுவதுபோல், இறக்கப்படுவதும் ஒழுங்கு முறையிலான சிறப்பு நிகழ்வாகவே இருக்கவேண்டும். கொடியை இறக்குபவரும் முதன்மையானவராக, தகுதியானவராக இருத்தல் வேண்டும்.
- தேசியக்கொடி இறக்கப்படும்பொழுது நிலத்தில் விழாது எட்டக்கூடிய உயரத்திலேயே வைத்து கைகளில் ஏந்தி எடுத்தல் வேண்டும். தேசியக்கொடி இறக்கும் நிகழ்வின்போது கையொலி எழுப்பக்கூடாது.அந்நிகழ்வு அமைதியாக நடைபெறவேண்டும்.
- தேசியக்கொடி பொதுவாக மாலை 6.00 மணிக்கு முன்னர் முறைப்படி இறக்கப்படவேண்டும். கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்சிகள் மாலை 6.00 மணிக்குப் பின்னரும் தொடருமாயின் நிகழ்ச்சி முடிவுற்றதும் கொடியை முறைப்படி இறக்கலாம்.
- கொடியேற்றித் தொடங்கப்படும் நிகழ்ச்சி நாட்கணக்கில் தொடருமாயின் அந்த நிகழ்ச்சிகள் முடிவுறும் வரை தேசியக்கொடி இரவும் தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படலாம்.நிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் முறைப்படி தேசியக்கொடி இறக்க வேண்டும்.
தேசியகீதப் பாடல்
0 comments:
Post a Comment