Tuesday, November 13, 2007

முகமாலை உத்தி

முகமாலையில் உள்ளே வரவிட்டு தாக்கும் உத்தியைக் கையாண்ட புலிகள்

உலகில் நடைபெறும் போர்களில் எதிர்பார்க்காத ஒன்று என்னவெனில் வெற்றிகளும், தோல்விகளும் மாறி- மாறி வருவது எப்படி என்பது தான். ஆனால் சிறிலங்காவில் இந்த கொள்கை மிக முக்கியமானதாக கொள்ளப்படுகின்றது.

இங்கு பிரகடனப்படுத்தப்படாத நாலாம் கட்ட ஈழப்போர் உக்கிரமடைந்து
வருகையில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளும் செயற்பாட்டில் உள்ளன. 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு, அதனைக் கண்காணிக்கும் கண்காணிப்புக்குழு, அமைதி நடவடிக்கைகள் என்பனவே அவை. இவை மூன்றும் தமது இறுதி மூச்சை இழுத்துக்கொண்டு இருக்கின்றன.

ஆனால் அரசும், விடுதலைப் புலிகளும் உக்கிரமான மோதல்களில் இறங்கியுள்ளன. கடந்த புதன்கிழமை அதிகாலைக்கு முன்னர் படையினர் தமது முன்னணி நிலைகளில் இருந்து முகமாலையில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி முன்நகர்ந்தனர். இது சிறிலங்காவின் பிரதான நிலப்பரப்பை யாழ். குடாநாட்டுடன் இணைக்கும் வடபகுதியின் முடிவில் உள்ளது.

விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது கடுமையான பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, முன்நகரும் படையினருக்கு பின்னால் சென்ற பிரதான போர் டாங்கிகளும் தாக்குதலை நடத்தின. எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் வான்தாக்குதலை மேற்கொண்டன.

கிளிநொச்சியின் திசையில் முன்நகர்வதே நடவடிக்கையின் நோக்கம். விடுதலைப் புலிகளின் முன்னணி அரண்களை அடைந்த படையினர், மேலும் முன்நகர முற்பட்ட வேளை விடுதலைப் புலிகள் இயந்திரத் துப்பாக்கிகள், உந்துகணை செலுத்திகள், மோட்டார்கள் என்பவற்றை கொண்டு கடுமையான தாக்குதலை தொடுத்தனர். கடுமையான சமர் மூண்டது.

படையினர் பெரும் நெருக்கடிக்குள் சிக்கினர், காயமடைந்த மற்றும் பொறிவெடிகளில் சிக்கிய தமது சகாக்களுக்கு உதவ முற்பட்டிருந்த வேளை துப்பாக்கிச் சூடுகளிலும், பொறிகளிலும் படையினர் சிக்கினர். விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலை ஆரம்பிக்க முன்னர் குறிப்பிட்ட அளவு தூரம் தம்மை அனுமதித்துள்ளனர் என்பதை படையினர் பின்னர் அறிந்து கொண்டனர். எனவே பின்வாங்குவதே முக்கிய தெரிவாக இருந்தது. படையினர் தமது நிலைகளுக்கு பின்நகர்ந்தனர்.

இந்த நடவடிக்கையில் 7 பற்றலியன் படையினர் ஈடுபட்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் அதிர்ச்சிகரமான தாக்குதலைத் தொடர்ந்து அவர்கள் பின்வாங்கியிருந்தனர். இது வழமையாக நடைபெறும் ஒன்று. பின்வாங்கும் படையினர் மற்றுமொரு நாள் தம்மைப் பலப்படுத்திக் கொண்டு தாக்குதலில் ஈடுபடலாம்.

சிறிலங்கா இலகு காலாட் படையைச் சேர்ந்த 4 ஆவது, 1 ஆவது பற்றலியன்கள், 1 ஆவது, 7 விஜயபா இலகு காலாட்படை றெஜிமென்ட், 4 ஆவது, 5 ஆவது கெமுனுவோச் பற்றலியன்கள், சிறிலங்காப் படையின் 6 ஆவது களமுனை பொறியியல் பிரிவு பற்றலியன் என்பன இந்த நடவடிக்கையில் பங்குபற்றியிருந்தன.

படையினர் முகமாலையின் தென்பகுதியை கைப்பற்றியிருந்தால் சில நிமிடங்களில் அந்தச் செய்தியை நாடு அறிந்திருக்கும். ஏனெனில் மில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்க வரவு-செலவுத் திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச, தனது உரையை இடையில் நிறுத்தி அந்த வெற்றிச் செய்தியை அறிவித்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது நடைபெறவில்லை. காலை 5:30 மணிக்கு முன்நகர்ந்த படையினர் மூன்று மணிநேரத்தில் தமது பழைய நிலைகளுக்கு திரும்பியிருந்தனர்.

தமது தரப்பில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 41 பேர் காயமடைந்ததாகவும் படையினர் தெரிவித்திருந்தனர்.

2002 ஆம் ஆண்டு உருவான போர் நிறுத்தத்தின் பின்னர் படையினர் முகமாலையில் மேற்கொண்ட இரண்டாவது பெரும் படை நடவடிக்கை இதுவாகும். கடந்த ஆண்டு ஒக்ரோபர் 11 ஆம் நாள் டாங்கிகள், துருப்புக்காவி வாகனங்கள் சகிதம் படையினர் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். கிபீர் விமானங்களும் தாக்குதலை நடத்தியிருந்தன. ஆனால் இந்த சமரில் 133 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 483 பேர் காயமடைந்திருந்தனர். அவர்களில் 283 பேர் போருக்கு திரும்ப முடியாத அளவிற்கு காயமடைந்திருந்தனர்.

கிழக்கை படையினர் கைப்பற்றிய பின்னர் வடபகுதி நோக்கி போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஓமந்தைக்கு மேற்காக மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஆனால் விடுதலைப் புலிகள் அங்கு கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro