Tuesday, November 13, 2007

யாழ்ப்பாண நகரம்


யாழ்ப்பாண நகரம



யாழ்ப்பாண நகரம் இலங்கைத்தீவின் வட கோடியிலுள்ள ஒரு நகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந் நகரம், நீண்ட காலமாகவே நாட்டிலுள்ள இரண்டாவது பெரிய நகரமாக விளங்கி வருகிறது. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற நிலையை (அந்தஸ்த்தை) இழந்தது. வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட போதும் பின்னர் வட மாகணத்தலைநகராக வவுனியாவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

1981இல் யாழ்ப்பாணத்தில் இறுதியாக எடுக்கப்பட்ட மக்கட்தொகைக் (சனத்தொகைக்) கணக்கெடுப்பின்படி, யாழ் நகரின் சனத்தொகை 118,000 ஆக இருந்தது. 20 வருடங்களின் பின் நாட்டில் 2001ல் கணக்கெடுப்பு நடந்தபோது, யாழ்ப்பாணத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனினும் அவ் வருடத்தில் இந் நகரின் சனத்தொகை 145,000 ஆக் இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களிற்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாகப் பல வழிகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், உரிய வளர்ச்சியைப் பெறவில்லையென்றே சொல்லவேண்டும்.

1981ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதும், குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வந்தார்கள். சிங்களவர்கள் மிகவும் குறைவே. சமய அடிப்படையில் பார்த்தால் யாழ்நகரில், கிறீஸ்தவர்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.

வரலாறு

தோற்றம

1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண அரசு போத்துக்கீசர் வசம் செல்லும் வரையில், அதன் தலைநகரம் என்ற வகையில் நல்லூரே இப் பகுதியில் பிரதான நகரமாக இருந்தது. அக்காலத்தில் இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் கொழும்புத்துறையில் ஒரு சிறிய இறங்கு துறையும், பின்னர் போத்துக்கீசரின் கோட்டை இருந்த இடத்தில் முஸ்லிம் வணிகர்களின் இறங்குதுறையும், பண்டசாலைகளும், சில குடியிருப்புக்களும் இருந்ததாகத் தெரிகிறது. 1590 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாண அரசனைக் கொன்று அவ்விடத்தில் இன்னொரு அரசனை நியமித்த பின்னர் அவர்களது செல்வாக்கு அதிகரித்தது. தொடர்ந்து சமயம் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் யாழ்ப்பாணக் கடற்கரையோரத்தில் தேவாலயம் ஒன்றையும், அவர்களுக்கான இருப்பிடங்களையும் கட்டியிருந்தனர். பின்னர் முஸ்லிம் வணிகர்களின் பண்டசாலைகள் இருந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டு அவ்விடத்தில் முன்னரிலும் பெரிதாகக் கட்டிடங்களைக் கட்டியிருந்ததாகத் தெரிகிறது. இக்கட்டிடங்கள் வழிபாட்டிடங்களாகவும், சமயம் பரப்பும் இடங்களாகவும் இருந்தது மட்டுமன்றிச் சில சமயங்களில் போத்தூக்கீசருக்கான ஆயுதக் கிடங்குகளாகவும், பாதுகாப்பு இடங்களாகவும் இருந்தன. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை யாழ்ப்பாண அரசன் நாவாந்துறைப் பகுதியில் குடியேற்றினான். கரையோரப்பகுதிகளில் மீன்பிடிக் குடியேற்றங்களும் இருந்தன. தற்போதைய யாழ்ப்பாண நகரத்தின் மையப்பகுதி அமைந்துள்ள இடங்கள் அக்காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், பனங் கூடல்களாகவுமே இருந்ததாகத் தெரிகிறது.

1620ல் யாழ்ப்பாண அரசை மீண்டும் தாக்கிய போத்துக்கீசர் அதனைக் கைப்பற்றித் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நல்லூர் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என உணர்ந்த அவர்கள் தங்கள் நிர்வாகத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர்.

போத்துக்கீசரின் யாழ்ப்பாண நகரம்

யாழ்ப்பாணத்தைத் தங்களுடைய நிர்வாக மையம் ஆக்கிய போத்துக்கீசர், முன்னர் தங்களுடைய தேவாலயம் அமைந்திருந்த இடத்தில் சதுர வடிவில் அமைந்த பெரிய கோட்டையொன்றைக் கட்டினார்கள். மதிலால் சூழப்பட்டிருந்த இக் கோட்டையுள் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், வேறு நிர்வாகக் கட்டிடங்களும் அமைந்திருந்தன. கோட்டைக்கு வெளியே போத்துக்கீசரின் இருப்பிடங்களோடுகூடிய யாழ்ப்பாண நகரம் அமைந்திருந்தது. யாழ்ப்பாண நகரில் அமைந்திருந்த கட்டிடங்களுள் கோட்டையையும் அது சார்ந்த கட்டிடங்களையும் தவிர, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மதப்பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க மடங்களைச் சேர்ந்த பெரிய கட்டிடங்களும் இருந்ததாகத் தெரிகிறது.

உள்ளூர் மக்களின் குடியிருப்புக்கள் இக்காலத்திலும், பெரும்பாலும் நல்லூரை அண்டியே இருந்திருக்கக்கூடும். இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் சோனகத்தெரு என்று அழைக்கப்படும் இடத்தில் சிறிய அளவில் முஸ்லிம் வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இன்றைய கரையூர், பாசையூர் ஆகிய இடங்களை அண்டிச் சிறிய மீன்பிடிக் குடியிருப்புக்களும் இருந்ததாகத் தெரிகிறது.

போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தில் 40 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே ஆட்சி செலுத்தினர் இதனால் யாழ்ப்பாண நகரம் பெருமளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் இல்லை. எனினும், இன்று யாழ்ப்பாண நகரத்துள் பெரிய அளவில் மக்களால் பின்பற்றப்படும் கத்தோலிக்க சமயமும், நிர்வாகம் தொடர்பான சில இடப்பெயர்களும் போத்துக்கீசர் தொடர்பை இன்றும் எடுத்துக்காட்டுகின்றன. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரம் ஒல்லாந்தரிடம் வீழ்ச்சியடைந்தது.

ஒல்லாந்தரின் யாழ்ப்பாண நகரம்

ஏறத்தாள 140 ஆண்டுகள் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்டனர். இதனால் அவர்களின் சுவடுகளை இன்றும் யாழ்ப்பாண நகரத்தில் காணமுடியும். போத்துக்கீசர் கட்டிய கோட்டையை இடித்துவிட்டு, புதிய கோட்டையொன்றை ஒல்லாந்தர் கட்டினர். இன்று பறங்கித் தெரு என்று அழைக்கப்படும் இடத்திலேயே ஒல்லாந்தருடைய குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. மிக அண்மைக்காலம் வரை இப்பகுதியில் ஒல்லாந்தர் காலக் கட்டிடக்கலையைக் காட்டும் பல கட்டிடங்கள் இருந்தன. அண்மைக்காலத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளால் இவற்றுட் பல அழிந்துபோய் விட்டன.

இவர்களுடைய காலத்தில் யாழ்ப்பாண நகரம் ஓரளவுக்கு விரிவடைந்தது என்று சொல்லமுடியும். பறங்கித் தெருப் பகுதியைத் தவிர, வண்ணார்பண்ணை போன்ற பகுதிகள் நகரத்தின் உள்ளூர் மக்களுக்குரிய பகுதிகளாக வளர்ச்சி பெற்றன.

இவர்களுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்து சமயம் தொடர்பான பிடிவாதம் தளர்ந்ததைத் தொடந்து முக்கியமான இந்துக் கோயில்கள் சில இன்றைய யாழ்ப்பாண நகரத்தின் எல்லைக்குள் அமைந்தன. பிற்காலத்தில் இப்பகுதிகள் சைவ சமயத்தவரின் பண்பாட்டு மையங்களாக உருவாக இது வழி சமைத்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில், யாழ் பெருமாள் கோயில் என்பன இவற்றுள் முக்கியமானவை.

பிரித்தானியரின் கீழ் யாழ்ப்பாண நகரம்

பிரித்தானியர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 152 ஆண்டுகாலம் நீடித்தது. இக் காலத்தில் யாழ்ப்பாணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக, பொருளாதார மற்றும் பௌதீக வளர்ச்சிகளைப் பெற்றது எனலாம். தற்காலத்து யாழ்ப்பாணக் கல்வி மேம்பாட்டுக்கு அச்சாணியாக விளங்கிய பாடசாலைகள் அனைத்தும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவையே. யாழ்ப்பாண நகரத்திலிருந்து குடாநாட்டின் பல பகுதிகளையும் இணைக்கும் வீதிகள் அமைக்கப்பட்டன. அத்துடன், யாழ்ப்பாணத்துடன் கண்டி,கொழும்பு போன்ற தென்னிலங்கை நகரங்களுக்கான வீதிகளும் உருவாயின.


இவற்றையும் பார்க்கவும்

யாழ்ப்பாணப் பொது நூலகம்
யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது மே 31 1981 எரிக்கப்பட்டுச் சாம்பலானது. எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும் திரும்பப் பெறமுடியாதவை. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.

வரலாறு

இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.நூலகக் கட்டிடத்தின் இன்னொரு தோற்றம்
நூலகக் கட்டிடத்தின் இன்னொரு தோற்றம்நூலகம் 1981 இல் எரிக்கப்படும் முன்னர் இருந்த தோற்றம்நூலகம் 1981 இல் எரிக்கப்படும் முன்னர் இருந்த தோற்றம்

1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக்குழு இது தொடர்பில் இந்திய நிபுணர்களினதும் உதவிகளைப் பெற்றுக்கொண்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணியும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.


கட்டிடத்தை இரண்டு கட்டங்களில் கட்டிமுடிக்கத் தீர்மானித்து, முதற்கட்டமாக கட்டிடத்தின் முன்பகுதிக்கான அடிக்கல் 1953 மார்ச் மாதத்தில் நாட்டப்பட்டது. கட்டிடவேலைகள் தாமதமாகவே நடைபெற்றன. 1959 இல் கட்டிடவேலைகள் முற்றாக முடிய முன்னரே, அப்போது யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா அவர்கள் நூலகத்தின் திறப்புவிழாவை நடத்தினார்.

யாழ் பொது நூலகம் எரிப்பு

1981 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டது. இந்தக் குழுவில் காமினி திசநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்குவர். யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.


0 comments:

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro