Sunday, November 11, 2007

சிங்கள இராணுவ அடக்கு முறை

தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகமும் சிங்கள இராணுவ அடக்கு முறையுன் தொடக்கமும்

சிறிமாவோ அம்மையார் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறிச் சிங்கள மொழியைத் தமிழர்மீது திணிக்கத் தொடங்கினார். இதனால் தமிழரசுக் கட்சி 61ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை ஆரம்பித்தனர்.


தமிழ்ப்பகுதிகளில் அரச நிர்வாகம் தனிச் சிங்களத்தில் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்குமுகமாக யாழ்ப்பாணம் , வவுனியா, மன்னார், திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசாங்க செயலகங்களை இயங்காமல் தடுப்பதற்காக இவைகளின் முன்னே சத்தியாக்கிரகம் செய்வதற்கு முடிவானது.

முறை மாற்றித் தமிழ் மக்கள் மேற்கொண்ட தடுப்பு முயற்ச்சியால் சிங்கள அரச நிர்வாகம் தமிழ்ப் பகுதிகளில் இயங்காது போயிற்று. நிலைமைகள் தனது கட்டுப்பாட்டிலிருந்து மீறிப்போவதைக் கண்ட சிங்கள அரசு மார்ச் மாதம் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு இராணுவத்தை அனுப்பியது.

முதற் தடவையாகச் சிங்கள இராணுவத்தின் அடக்கு முறைகளைச் சந்திக்க நேர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் தமிழர் சுயாட்சி என்பதன் குறியீடாகத் தமிழரசு அஞ்சற் சேவை செல்வநாயகத்தால் ஆரம்பிக்கப்பட்டது.

முத்திரைகள் தமிழரசுச் சின்னத்தில் அச்சிடப்பட்டு ஒரு வார காலத்திற்கு அஞ்சற் சேவை நடைபெற்றது. கொழும்பில் தமிழரசு காவற்துறை ஒன்று உருவாக்கப்படப் போவதாக செய்தியொன்று வெளியிடப்பட்டபின் வடக்குக் கிழக்கிற் சிங்கள இராணுவம் ஒரே இரவிற் சகல சத்தியாக்கிரக மையங்களிலும் புகுந்து சத்தியாக்கிரகம் செய்தோர் மேல் கடும் தாக்குதலை மேற் கொண்டனர்.

தமிழரசுக் கட்சி எம்பிக்களும் (M. P) ஏனையோரும் கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 90 பேர் 6 மாதங்களுக்கு கொழும்பு பனாகொடை இராணுவ முகாம் விடுதியொன்றிற் தடுத்துவைக்கப்பட்டனர். பின்னர் ஒக்ரோபர் மாதம் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்த் தேசிய வாதத்தின் தொடக்கமாக இரண்டு வருடகால அவசரகால நிலையின் கீழ்த் தமிழ் மக்கள் ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டனர். சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மிக எழுச்சியோடு தமிழ் மக்கள் பங்கு பற்றிய போது அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான திட்டமெதுவும் இல்லாத நிலையில் மக்கள் எழுச்சியும் பின்னர் தளர்வடைந்து விட்டது.

0 comments:

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro